மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், பல்வேறு சமூக அமைப்பினர் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்திவருகின்றனர். டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மத்திய அரசு, விவசாயிகள் உடன் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியையே தழுவியது.
இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவாசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, “புதிய வேளாண் சட்டத்தின் நோக்கமே மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை மீண்டும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் கொண்டுவருவதே. இதன் மூலம் ஆண் மற்றும் பெண்களை வம்சாவளியைப் பெருக்காமல் பார்த்துக்கொள்வதற்காகத்தான் இந்தச் சட்டத்தில் மத்திய அரசு தன்னுடைய அராஜகப் போக்கை காட்டிவருகிறது” என்று தெரிவித்தனர். இப்போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மேலாடையின்றி போராடினர்.