ஊரடங்கு அமலில் உள்ளதால் போராட்டங்களுக்குத் தமிழக அரசு தடைவித்து இருந்தது. இதனால் போராட்டம் தமிழகம் முழுவதும் தவிர்க்கப்பட்டு வந்தாலும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைவரும் தங்களது வீடுகளின் முன் நின்று மதுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் திருச்சியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை 'ஜல்சக்தி' அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வந்ததை எதிர்த்து ஒரு கிராமத்தில் உள்ள மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினர் தமிழக விவசாய சங்கத்தினர்.
திருச்சி மாவட்டம் அதவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மேலப்பேட்டை கிராமத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ம.ப. சின்னதுரை தலைமையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ள நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் மேலப்பேட்டையில் உள்ள வீடுகள் முன்பாக ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், விவசாயிகள் அனைவரும் விவசாய சங்கத்தின் கொடியினை ஏந்தியும், கருப்புக்கொடி ஏந்தியும், போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கு பெற்ற அனைவரும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் நின்று கோஷங்களை எழுப்பினர்.