Skip to main content

அரசு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

trichy district collector public exam wishes to students 

 

2022 - 23 ஆம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகளானது மேல்நிலை இரண்டாமாண்டிற்கு 13.03.2023 முதல் தொடங்கி 03.04.2023 வரையிலும், மேல்நிலை முதலாமாண்டிற்கு 14.03.2023 முதல் தொடங்கி 05.04.2023 வரையிலும், பத்தாம் வகுப்பிற்கு 06.04.2023 முதல் தொடங்கி 20.04.2023 வரையிலும் நடைபெற உள்ளது.

 

இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பொதுத்தேர்வை 260 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 133 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 449 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 172 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

 

மேல்நிலை இரண்டாமாண்டில் 16,802 மாணவர்களும், 17,590 மாணவிகளும் என மொத்தம் 34,392 மாணவ மாணவியரும், மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வினை 14,088 மாணவர்களும், 16,678 மாணவிகளும் என மொத்தம் 30,766 மாணவ மாணவியரும், பத்தாம் வகுப்பில் 17,494 மாணவர்களும், 17,363 மாணவிகளும் என மொத்தம் 34,857 மாணவ மாணவியரும் எழுதவுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போதுமான அளவு இருக்கை வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களுக்கான மின்சார வசதி மற்றும் போக்குவரத்து வசதியும் சார்ந்த துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

தேர்வுப் பணியில் 133 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், 133 துறை அலுவலர்கள், 20 வினாத்தாள் கட்டுப்பாளர்கள், 30 வழித்தட அலுவலர்கள், 265 நிலையான/பறக்கும் படை உறுப்பினர்கள், 2407 தேர்வறை கண்காணிப்பாளர்கள், 229 சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 275 அலுவலகப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் தேர்வுகளுக்கு நல்ல முறையில் படித்து தேர்வுகளைச் சிறப்பான முறையில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்