தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டதாலும், கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினியைக் கொண்டு கழுவ வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கியுள்ளனர்.
திருச்சி மாவட்டம், கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் பிரியாணி உணவகத்தில் இன்று (06/06/2021) மதியம், பிரியாணி வாங்குவதற்காகக் கூட்டம் அலை மோதியது. பிரியாணியை வாங்குவதில் மட்டுமே பிரியாணி பிரியர்கள் ஆர்வம் காட்டியதால் சமூக இடைவெளி கேள்வி குறியானது. மேலும், கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இந்த உணவகத்துக்கு அருகாமையில் காவல்துறை உதவி மையம் இருந்தும் காவலர்கள் இந்த கூட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்தப் பகுதியில் தொடர்ந்து இதே போன்று உணவகங்கள் அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.