கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி திருச்சி மாவட்டம் கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம் சுந்தர்ராஜ் நகரில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 10 பவுன் தங்க தாலி செயினை பறித்துச் சென்ற புகாரின் பேரில் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் இனாம்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 44) மற்றும் குண்டூர் அய்யனார் நகரைச் சேர்ந்த புகழேந்தி (வயது 50) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் புகழேந்தி மற்றும் செல்வராஜ் ஆகியோர் மீது திருச்சி மாநகர கே.கே.நகர் காவல் நிலையத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையிடம் தங்க செயினை பறித்ததாக ஒரு வழக்கும், ஏர்போர்ட் காவல் நிலையத்தில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் செயினை பறிக்க முயன்றதாக ஒரு வழக்கும், செல்வராஜ் மீது திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் காவல் நிலையத்தில் ஒருவரை பீர் பாட்டிலால் தாக்கிய வழக்கும் உட்பட 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
எனவே புகழேந்தி மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், இவர்களின் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்ட ஆணை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.