
திருச்சி மாநகர காவல் ஆணையரின் நேரடி சோதனையில் ஸ்ரீரங்கம் காவல் சரக மேலூரில் கள்ளச்சந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்யப் பதுக்கி வைத்திருந்த நபரின் வீட்டிலிருந்து அரசு மதுபானம் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் உத்தரவின் பேரிலும் தமிழக காவல்துறை இயக்குநரின் மேலான அறிவுறுத்தலின் பேரிலும் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம், போலி மதுபானம் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக நேற்று (17.05.2023) திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா இ.கா.ப., திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் காவல் சரகம் மேலூர் கிராமம் வடக்கு தெரு, கிழக்கு தெரு, கொள்ளிடக்கரை மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதிகளில் நேரடியாக மதுவிலக்கு வேட்டை மேற்கொண்டார்.
இந்த மதுவிலக்கு வேட்டை சோதனையின்போது மேலூர் வடக்கு தெருவில் வசித்து வரும் மருதமுத்து மகன் பிரபு என்பவரின் வீட்டில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை கண்டுபிடித்து அவை கைப்பற்றப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அப்பகுதியில் ஏற்கனவே கள்ளச்சந்தையில் மதுபானம் விற்று வந்த தங்கபொண்ணு என்கிற மூதாட்டிக்கு கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கக் கூடாது என்றும் வாழ்வாதாரத்திற்கு வேண்டிய உதவிகள் செய்வதாகவும் அறிவுரைகள் வழங்கினார்கள்.
மேலும், கடந்த 4 நாட்களாக திருச்சி மாநகரத்தில் அனைத்து காவல் அதிகாரிகளும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தியதில், கள்ளச்சந்தையில் அரசு மதுபானங்களை விற்பனை செய்ததாகவும், விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாகவும் 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 78 பேரிடமிருந்து 605 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற கள்ளச்சாராயம், போலி மதுபானம் மற்றும் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.