இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் பெரிய எழுச்சியோடு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் கடந்த மாதம் முழுவதும் வண்ணாராப்பேட்டை சம்பவத்திற்கு பிறகு முஸ்லீம் பெண்கள் தொடர்ச்சியாக பொது இடங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இச்சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசியக் குடியுரிமைப் பதிவேடு பணிகளைத் தொடங்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
திருச்சி தென்னூா் உழவா் சந்தை மைதானத்தில் இஸ்லாமியா்கள் 16- ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் மக்கள் அதிகாரம் சார்பில் 'அஞ்சாதே போராடு' என்கிற பிரமாண்டமான பொதுகூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைப்பின் மாநில பொருளாளர் காளிப்பன், திரைப்பட இயக்குநர் லெனின்பாரதி, தமிழ்தேசிய விடுதலை இயக்க பொது செயலாளர் தியாகு, உள்ளிட்ட 1,000 போ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதே போன்று தில்லைநகா் 80 அடி சாலையில் குடியரிமை திருத்தச் சட்ட உறுதி மொழி போராட்டம் நடத்திய மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் செழியன் 50 போ், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் போராட்டம் நடத்திய திருச்சி ஜாமல் முகமது கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் மாணவர் சங்க நிர்வாகி சுரேஷ் மற்றும் பிரதீப் உள்ளிட்ட 250 மாணவா்கள் என 1,300 போ் மீது தில்லைநகா், கே.கே.நகா் காவல் நிலையத்தினா் தனித்தனியே வழக்குப்பதிந்துள்ளனா்.