தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் நாளை (28/06/2021) முதல் திருச்சியிலிருந்து பேருந்துகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதனையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 அரசுப் பேருந்து டிப்போக்களில் உள்ள பேருந்துகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி இன்று (27/06/2021) தொடங்கியுள்ளது.
திருச்சி மாநகரில் மொத்தம் 936 பேருந்துகள் உள்ளன. அதில் 440 மாநகரப் பேருந்துகளும், 496 மாவட்ட பேருந்துகளும் உள்ளது. நாளை 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் இன்று முதல் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை தூய்மை செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் செய்து வருகின்றனர்.
மேலும் பேருந்துகளை பேருந்து நிலையங்களில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காலத்தில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் தற்காலிக மீன் மார்க்கெட் ஆக மாற்றப்பட்டு இருந்த நிலையில் இன்றுவரை மத்திய பேருந்து நிலையத்தில் மீன் மார்க்கெட் இயங்கி வந்தது. நாளை முதல் மீன் மார்க்கெட் மீண்டும் குழுமணி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மார்க்கெட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.