திருச்சியில் இருந்து துபாய் செல்லும் விமானம் இன்று காலை 9.25 மணிக்கு புறப்பட வேண்டும். ஆனால் மதியம் வரை அந்த விமானம் புறப்படவில்லை. இதனால் குழப்பமடைந்த அந்த விமானத்தில் பயணப்படவிருந்த 130க்கும் மேற்பட்டவர்கள், இது குறித்து ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் கேட்டனர். அப்போது உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் பயணிகள் ஆத்திரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சலசலப்பு நிலவியது.
இது குறித்து விசாரித்தபோது, திருச்சி விமான நிலையத்தில் 2 மணி நேரத்திற்கு முன்னதாக கரோனா பரிசோதனை செய்து அதன் பின்னர் விமானத்தில் பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், இந்த கரோனா சான்றிதழை துபாய் நாட்டு அரசு ஏற்றுகொள்ள மறுத்து விட்டது. வேறு வகையான டெஸ்ட் எடுத்துக்கொண்டு பயணிகளை அனுப்பி வைக்க அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் திருச்சியில் இருந்து வரும் விமானம் துபாயில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் துபாய் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதன் காரணமாக துபாய் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. அங்கிருந்து பயணிகள் காரில் துபாய்க்கு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதற்கு பயணிகள் ஒப்புதல் அளித்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.