![g](http://image.nakkheeran.in/cdn/farfuture/tYL3u46YhzIBI8iBpRZApB_V5wijdGAsERVOLv4pSMA/1547574878/sites/default/files/inline-images/Gold%202.jpg)
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, கொச்சி, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், அங்கிருந்து திருச்சிக்கும் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக திருச்சி விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். தமிழகத்தின் மையப்பகுதி என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் திருச்சி விமானநிலையத்திற்கு வந்து கொண்டே இருப்பதால் எப்போதும் பயணிகளுடன் நிரம்பி வழியும்.
இப்படி பயணிகள் அதிகம் பேர் வருவதை சாதகமாக பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகள் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து வாடிக்கையாகி விட்டது.
திருச்சி விமான நிலையத்திற்கு கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம், வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அகமதாபாத்தைச் சேர்ந்த நூர் ஷா குல் முகம்மத் என்பவர் 599 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 19.30 லட்சம் ரூபாய்.
இதேபோல மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது மலேசியாவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் மறைத்து எடுத்து வந்த 226 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 7 லட்சம். இதையடுத்து கடத்தி வந்த இருவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்படி தொடர்ச்சியாக திருச்சி விமானநிலையத்தில் தங்கம் பிடிப்பட்டுக்கொண்டே இருந்தாலும் கடத்தல் சம்பவம் மட்டும் குறையவில்லை என்பது தற்போது அதிகாரிகளிடம் இருக்கும் முக்கியமான கேள்வி.