கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள தாசர்புரத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணி செய்து வருகிறார். கடந்த 26 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் பணி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக மருத்துவமனைக்கு அருகில் உள்ள டேனிஷ் மெஷின் பஸ் நிறுத்தத்திற்குச் சென்று பேருந்துக்காகக் காத்திருந்தார்.
நீண்ட நேரம் ஆகியும் பஸ் வராததால் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறி பஸ் ஸ்டாண்ட் வரை கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார் . அந்த ஆட்டோ தீயணைப்பு நிலையம் வரை சென்று திடீரென சங்கராபுரம் செல்லும் சாலையில் வேகமாக திரும்பி சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த செவிலியர் பெண் ஏன் இந்த வழியில் செல்கிறீர்கள் பஸ் ஸ்டாண்டுக்கு அந்த வழியாகச் செல்ல வேண்டும். பாதை மாறி ஏன் செல்கிறீர்கள் என்று சத்தம் போட்டு உள்ளார். அப்படியும் அவரது பேச்சைக் கேட்காத ஓட்டுநர் ஆட்டோவை ஒரு சந்துப் பகுதிக்குத் திருப்பியுள்ளார்.
இதைப் பார்த்து அந்த செவிலியர் பெண் தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று சந்தேகம் அடைந்து உடனே ஆவேசத்துடன் கத்திக்கொண்டே ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து செவிலியர் பெண்ணை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்று செவிலியரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருவண்ணாமலை மாவட்டம் மதுராம்பட்டையைச் சேர்ந்த 23 வயது விஜயகுமார் என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். செவிலியரை இரவு நேரத்தில் தவறான நோக்கத்தில் கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரின் இந்தச் செயல் திருக்கோவிலூர் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.