திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் நேற்று திடீரென சூறாவளி காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் கடுமையான வெப்பத்திலிருந்து பொதுமக்கள் மீண்டும் ஒரு புத்துணர்ச்சியை பெற்றுள்ளனர்.
இதனிடையே துறையூரில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் சாலையின் ஓரத்தில் இருந்த 3 புளியமரங்கள் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக சாய்ந்துள்ளது. இதில், தம்மம்பட்டியில் இருந்து துறையூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மற்றும் அந்த வழியாக பயணித்த கார் மீது புளியமரங்கள் சாய்ந்தன. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படாமல் வாகனங்கள் மட்டும் சேதமடைந்தன.
இச்சம்பவம் அறிந்து வந்த துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்களை உடனடியாக ஆட்களை வைத்து 2 மணி நேரத்தில் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தார். இதையடுத்து பயணிகளை மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைத்தனர்.