சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இன்று வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் நடந்தது. அதில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் ஆஜரானார். அப்போது அவர், தனக்கு தேவையான வசதிகளை செய்துதரவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் அது இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதேபோல தன்னிடம் ஒப்படைக்கவேண்டிய ஆவணங்களையும் இன்னும் ஒப்படைக்கவில்லை. குறிப்பாக டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் தன்னுடைய அலுவலகத்திற்கு வரவில்லை. பலமுறை மின்னஞ்சல் அனுப்பியும் அதற்கு பதிலில்லை என குற்றம் சாட்டினார்.
அப்போது நீதிமன்றம், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி ஆவணங்களை கேட்கும்போது ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அரசுக்கும், காவல்துறைக்கும் என்ன தயக்கம் இருக்கிறது. உத்தரவுகளை செயல்படுத்தாமல் எந்த சக்தி உங்களைத் தடுக்கிறது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதைத்தொடர்ந்து பேசிய பொன்.மாணிக்கவேல் தன்னிடம் ஒப்படைக்கவேண்டிய ஆவணங்களை ஒப்படைக்காமல் இருப்பவர்களை கைதுசெய்து விசாரிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவேன் என்று கூறினார். சட்டத்திற்கு உட்பட்டு அதை செய்ய முடியுமானால், அதையும் செய்யுங்கள் நீதிமன்றம் அதற்கான முழு அதிகாரத்தையும் வழங்குகிறது என நீதிமன்றம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அரசும், காவல்துறையும் பொன். மாணிக்கவேலிற்கு செய்துகொடுக்கப்பட்ட வசதிகள் குறித்த ஆவணங்களை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.