திருச்சி மேலூர் ரோடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சரவண செல்வன் (41). இவர் அந்த பகுதியில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி லாவண்யா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சரவண செல்வன் அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இந்நிலையில் சரவண செல்வன் அந்த பெண்ணுக்கு பல லட்சம் பணம் செலவு செய்து வந்ததாக தெரிகிறது. அதன்பிறகு திடீரென்று அந்த பெண்ணின் தொடர்பை சரவண செல்வன் நிறுத்திக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் திருவரங்கம் போலீஸ் நிலையத்தில் சரவண செல்வன் மீது புகார் கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து திருவரங்கம் போலீசார் சரவணனை அழைத்து புகார் மனு குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சரவண செல்வன் இரவு அறையில் தூங்குவதாக மனைவியிடம் கூறி விட்டு அறைக்கு சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விடியற்காலை நீண்ட நேரம் ஆகியும் கணவர் அறையில் இருந்து வெளியே வராத காரணத்தால் சந்தேகம் அடைந்த மனைவி லாவண்யா அறைக்கு சென்று பார்த்த போது சரவண செல்வன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவரங்கம் போலீசார் தூக்கில் தொங்கிய சரவண செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உறவினர்கள் சரவண செல்வன் அறையில் இருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் அந்த பெண் மற்றும் திருவரங்கம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் என்றும், இந்த புகார் தொடர்பாக சிலர் தன்னை டார்ச்சர் செய்ததாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே தன்னுடைய சாவுக்கு மேற்கண்ட நபர்கள் தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.
இந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவண செல்வனின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறி சரவண செல்வன் உடலை வாங்க மறுத்து திருவரங்கம் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தால் திருவரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.