





மத்திய பா.ஜ.க.மோடி அரசு கொண்டுவந்த மூன்று வேளான் திருத்தச் சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுக்க விவசாயிகள் தொடர்ந்து போர் குரல் எழுப்பி வருகிறார்கள். அரியானா, அசாம் மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் குடும்பத்துடன் முகாமிட்டு இரவு பகலாக அங்கேயே தங்கி "மூன்று வேளான் சட்டங்களை மோடி அரசே திரும்பப் பெறு" என ஆறு மாத காலமாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயிகளின் அரை வருட காலமாக அற வழியில் போராடுவதை மத்திய பா.ஜ.க. அரசு கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதற்கு சர்வதேச சமூகம் கண்டன குரல் எழுப்பியுள்ளது. விவசாயிகளின் இந்த தொடர் போராட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், தி.மு.க., உட்பட 22 மாநிலக் கட்சிகள் ஆதரவாக உள்ளது. இந்நிலையில், இந்திய அளவில் விவசாயிகள் அமைப்புகளை ஒருங்கிணைத்து "சம்யுக்த கிசான் மோர்ச்சா" என்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதில் தொழிற்சங்கங்களும் இணைக்கப்பட்டு தொடர்ச்சியான பல கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மோடி, பிரதமராகப் பதவி ஏற்று ஏழு வருடங்களைப் பூர்த்தி செய்யும் மே 26ம் நாள் இந்தியாவின் கருப்பு தினம் என விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்து, மே 26 ம் நாளன்று வீடுகள் மற்றும் பொதுவெளியில் கருப்பு கொடி பறக்க விட்டு, கண்டன முழக்கமிடுமாறு அறை கூவல் விட்டிருந்தது. அதன்படி, இந்திய நாட்டில் உள்ள விவசாயிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அவர்களின் வீடுகள், தெருக்களில் கருப்புக்கொடியேந்தி "மக்கள் விரோத மோடி அரசே பதவி விலகு... மக்களின் உயிரைக் காக்கத் தவறிய மோடியே பதவி விலகு... இந்திய மக்களைக் கொல்லாதே... தொழிலாளர், விவசாய விரோதி பா.ஜ.க.வே பதவி விலகு..." எனக் கண்டன முழக்கமிட்டனர்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், தஞ்சை, நெல்லை, திருச்சி, குமரி, திருவாரூர், ஈரோடு, பவானி, கடலூர் என அனைத்து நகரங்கள் கிராமங்களிலும் இடதுசாரி மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்த போராட்டத்தை நடத்தினார்கள். வேளான் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் ஒற்றை கோரிக்கை. நாட்கள் கடந்தால் போராட்டம் நீர்த்துப் போகும் என்பது ஆள்வோரின் கணக்கு. ஆனால், விவசாயிகள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருப்பது அவர்களின் போராட்டமே சாட்சி.