ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பௌர்ணமியின் போது கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான திருநங்கைகள் ஒன்று கூடி அரவானுக்கு தாலி கட்டி ஒரு இரவு அவருக்கு மனைவியாக இருந்து விட்டு மறுநாள் அரவான் களபலி கொடுக்கப்பட்டதும் கட்டிய தாலியை அறுத்து விதவை கோலம் பூண்டு அரவான் தேர் ஊர்வல விழா முடிந்ததும் அவரவர் வசிப்பிடத்திற்கு திரும்புவார்கள்.
இது தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் ஒன்று சேர்ந்து வந்து கூடும் திருவிழாவாகும். வரும் சித்திரை மாதம் இந்த ஆண்டுக்கான திருவிழா நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் திருவிழாவுக்கு வரும் திருநங்கைகள் விழுப்புரத்தில் தங்குவார்கள். அங்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் அரசு மற்றும் பல்வேறு தொண்டு நிறுவன அமைப்புகள் சார்பில் பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. இதில் அழகி போட்டி, பேச்சுப் போட்டி, நாட்டியம் மற்றும் ஆடல் பாடல் என களைகட்டும்.
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் ஏற்கனவே ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தது. அதன் பிறகு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக 2019ல் உருவானது முதல் கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ள பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை நகராட்சி பகுதியில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவி மோகனாம்பாள், ஒருங்கிணைப்பாளர்கள் அருணா, சுபிக்ஷா ஆகியோர் பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்தினர் சந்திப்பு நடத்தினர். அப்போது அவர்கள் கூறும் போது, "மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக இந்த ஆண்டு எங்களுக்கான கலை நிகழ்ச்சிகளை 50% சதவீதம் விழுப்புரத்திலும் 50 சதவீதம் உளுந்தூர்பேட்டையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே மாதம் ஒன்றாம் தேதி மிஸ் கூவாகம் 2023க்கான அழகி போட்டியின் முதல் மற்றும் இரண்டாம் சுற்று நிகழ்ச்சிகள் உளுந்தூர்பேட்டையில் காலை 9 மணி முதல் 2 மணி வரை நடத்தப்படும். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இரு மாவட்டங்களிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மிஸ் கூவாகம் இறுதிப்போட்டி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திறந்தவெளி திடலில் நடைபெறும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூத்தாண்டவர் கோவில் திருவிழாவிற்கு கூடுதல் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் பகுதியில் கழிவறைகள், தங்கும் வசதி ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுக்கும் படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கூத்தாண்டவர் கோவில் பகுதியில் திருவிழா அன்று திருநங்கைகள் பாதுகாப்பான முறையில் தங்குவதற்கு பெரிய மண்டபங்கள் கட்டித் தருமாறு 2005 ஆம் ஆண்டு முதல் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். இருப்பினும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கோவில் திருவிழாவில் ஒவ்வொரு திருநங்கையும் ஒரு கிராம் முதல் ஒரு சவரன் வரை தங்க தாலிகளை காணிக்கையாகச் செலுத்தி வருகிறோம். அந்த தங்கத்தை அறநிலையத்துறை எடுத்துக் கொள்கிறது. அதன் மூலமாக எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அறநிலையத்துறை கோவில் வளாகத்தில் ஏற்படுத்தி தர வேண்டும். கூவாகம் கிராமத்திற்கு யுனெஸ்கோ குறியீட்டைப் பெற்றுத் தர அரசு முன்வர வேண்டும். பல மாநிலங்களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அது போல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
திருநங்கைகளை அவர்களது பெற்றோர்கள் புறக்கணிக்கக் கூடாது. அவர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்" என பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு விடுத்துள்ளனர். வரும் கூத்தாண்டவர் கோவில் திருவிழா விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.