“நான் கஷ்டப்பட்டு, சுயமாக உழைத்து கலெக்டர் ஆபீஸ் அருகே ஜூஸ் கடை வச்சிருக்கேன்” என ‘அவனுள் அவள்’ என்ற திட்டத்தில் பங்கேற்ற திருநங்கையின் பேச்சு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
திருநங்கையர்களின் சமூக அந்தஸ்தினை வலுப்படுத்துவதற்காக பொதுவெளி சமூகத்தில் அவா்களின் பங்களிப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காக, ‘அவனுள் அவள்’ என்ற திட்டத்தை கோரோட் அறக்கட்டளை சார்பாக லெமன் எயிட் சாரிட்டி பவுன்டேசன் என்ற நிதி நிறுவனத்தின் உதவியுடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கோரோட் அறக்கட்டளையில் இருந்து துறையூர் பகுதியைச் சாா்ந்த 20 திருநங்கையா்களுக்கு 8 நாட்கள் தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சியின்போது முசிறியைச் சேர்ந்த வள்ளி மற்றும் திருமிகு ஆகியோர் மூலிகை நாப்கின் தயாரிப்பு குறித்து விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, மஞ்சள் பை நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றிய விளக்கத்தை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருமிகு, கெளரி ஆகியோர் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து, இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட திருச்சி மாவட்ட திருநங்கைகளின் சங்கத் துணைத்தலைவி ஹசானா பாத்திமா அங்கிருந்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றினார். அதன்பிறகு, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுயதொழிலாக ஜூஸ் கடை மற்றும் ஜெராக்ஸ் கடை அமைத்து சுயமாக தொழில் செய்து சமூகத்தில் அந்தஸ்தை ஏற்படுத்தி முன் உதாரணமாக இருக்கக்கூடிய திருநங்கை அமிர்தாவும் அவரின் சுயதொழில் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து, கோரோட் அறக்கட்டளை கூறும்போது “திருநங்கைகளுக்கான சுய தொழில்முனைவதற்கு தேவையான ஆக்கமும், ஊக்கமும் இப்பயிற்சி மூலம் அளிக்கப்பட்டது. சுயதொழில் செய்வதற்கான உறுதிமொழியும் அனைவராலும் மொழியப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்புகள், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ளது” என கோரோட் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டது.