திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், சீவல்சரகு ஊராட்சி, ஜெ.புதுக்கோட்டையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2018-19 நிதி மூலம் சுமார் 8.70 இலட்சம் அளவில் புதியஅங்கன்வாடி மையம் கட்டிக் கொடுக்கப்பட்டது. அங்கன்வாடி மையம் அருகே பழமையான திறந்தவெளி கிணறு உள்ளது. அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் கிணறு அருகே அடிக்கடி சென்றதால் ஊர் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மறுத்ததால் தற்போது அங்கன்வாடி மையம் அருகில் உள்ள மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடத்தப்படும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
முறையான கழிப்பிட வசதி இல்லாமல் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டும், அருகில் திறந்தவெளி கிணறு இருப்பதால் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து ஜெ.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், மணப்பாறை அருகே திறந்தவெளி ஆழ்துளைக்கிணற்றில் சுர்ஜித் தவறி விழுந்து இறந்ததை அடுத்து நாங்கள் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப மறுத்துவிட்டோம். காரணம் அங்கன்வாடி மையத்திற்கு 10அடி தூரத்தில் திறந்தவெளி கிணறு உள்ளது. பிறகு எப்படி நாங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவோம் என்றனர்.
அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் வராததை அடுத்து அங்கன்வாடி மைய பணியாளர்கள் அருகே உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் தற்காலிகமாக அங்கன்வாடி மையத்தை மாற்றி உள்ளனர். எத்தனை குழந்தைகள் இருந்தாலும் பரவாயில்லை என்ற நோக்கத்தோடு சீவல்சரகு ஊராட்சி நிர்வாகமும். ஆத்தூர் ஒன்றியமும் செயல்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி சீவல்சரகு ஊராட்சி ஜெ.புதுக்கோட்டையில் அங்கன்வாடி மையம் அருகே உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு இரும்புமூடி போட உத்தரவிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.