கோவை மாவட்டம் காந்திபுரத்திற்கு அருகே தனியாருக்கு சொந்தமான காலி இடங்கள் நிறைய இருக்கின்றன. அந்த வகையில், அங்குள்ள ஒரு காலி இடத்தில் கடந்த 8 ஆம் தேதியன்று எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. அப்போது அவ்வழியாகச் சென்றவர்கள் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அலங்கோலமாக கிடந்த உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், இச்சம்பவம் நடந்த பகுதி காட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதா அல்லது ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதா என்ற குழப்பமும் எழுந்துள்ளது. இறுதியாக அந்த இடம் ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குள் வருவதாக தெரிவிக்கப்பட்டு இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தங்களது விசாரணையைத் துவங்கினர்.
இந்நிலையில், அந்த பெண் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? அல்லது எரித்து கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசாரின் விசராணை நகர்ந்து கொண்டே போனது. அதுமட்டுமின்றி, முதலில் கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை தெரிந்துகொள்வதற்காக கோவையில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவலை திரட்டிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த காலி இடத்தில் கொலை செய்யப்பட்டது ஒரு திருநங்கை என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், இந்த வழக்கின் விசாரணையை வேறு திசைக்கு மாற்றியுள்ளனர். அப்போது, அந்த திருநங்கை குறித்து மேற்கொண்ட விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த அபிராமி என்பது தெரியவந்துள்ளது. அதே சமயம், இந்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியாமல் ரத்தினபுரி போலீசார் திக்குமுக்காடி வருகின்றனர். அதனால் திருநங்கை மரணத்தில் நீடித்து வரும் மர்மம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.