சேலம் மாவட்டத்தில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 150 காவலர், எஸ்.ஐ. உள்ளிட்டோரை இடமாறுதல் செய்து எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்ட காவல்துறையில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளும், அதற்கு மேலும் பணியாற்றி வரும் எஸ்.ஐ.க்கள், தலைமைக் காவலர்கள், காவலர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு, சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை (ஜூலை 13), மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் தலைமையில் நடந்தது.
கடந்த காலங்களில், இடமாறுதலில் செல்ல விரும்பினாலும் காவலர்களுக்கு அத்தனை எளிதில் மாறுதல் உத்தரவு கிடைக்காது. இதனால் வேறு வழியின்றி, உயர் அதிகாரிகள் அல்லது அரசியல் புள்ளிகளைப் பிடித்து இடமாறுதல் ஆணை பெறும் வேலைகள் நடந்து வந்தன.
இந்நிலையில், ஸ்ரீஅபிநவ் சேலம் மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்ற பிறகு, இடமாறுதல் கலந்தாய்வை சீர்படுத்தினார். அரசியல் மற்றும் அதிகாரிகள் தலையீடின்றி காவலர்கள், எஸ்.ஐ.க்கள் விரும்பும் காவல்நிலையங்களுக்கு மாறுதலில் செல்லும் கலந்தாய்வை அவரே முன்னின்று நடத்தத் தொடங்கினார்.
அதன்படி, கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களிடம், எந்த காவல்நிலையத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள்? என்று எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் விசாரித்து, அவரே அதற்கான ஆணையை வழங்கினார். புதிய இடத்தில் தவறு செய்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்த கலந்தாய்வு மூலம் ஒரே நாளில் காவலர், தலைமைக் காவலர், எஸ்.ஐ.க்கள் என மொத்தம் 150 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கினார்.