ரயில் வரும் முன்பே ரயில்வே கேட்களை மூடி மற்ற வாகனங்களை ரயில் செல்லும் வரை காத்திருக்க வேண்டும். ரயில் சென்ற பிறகே கேட் திறக்கப்படும். அதற்கென ஒவ்வொரு கேட்டிலும் ஒரு ஊழியர் இருப்பார். ஆனால் பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் கேட் திறப்பாளர்கள் இல்லாததால் ரயிலை நிறுத்தி அந்த ரயிலில் வரும் ஊழியரே கேட்டை மூடுவதும் மற்றொரு ஊழியர் மூடிவிடு ரயிலில் ஏறிச் செல்வதுமான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை வரையிலான ரயில் போக்குவரத்து கடந்த வாரம் தொடங்கியது. இந்த வழித்தடத்தில் வாரத்தில் சில நாட்கள் மட்டும் ரயில் இயக்கப்படுகிறது. திருவாரூர் வரையிலான பாதை முழுமையாக அமைக்கப்பட்ட பிறகு தினசரி ரயில்கள் செல்ல உள்ளது.
இந்த நிலையில் ரயில் பாதை வேலைகள் முழுமையாக முடிவடையாத நிலையில் பணிகள் முடிந்த பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் தற்போது ரயில் இயக்கப்படும் நிலையில் 6.30 மணி நேரத்திற்கு பயணம் இருந்ததால் பயணிகள் கொந்தளித்தனர். அதனால் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டது. காரைக்குடி பட்டுக்கோட்டை வரை சுமார் 20 கேட்கள் உள்ளது. ஆனால் எந்த கேட்டிலும் கேட் கீப்பர் இல்லை. அதனால் ரயில் எஞ்சின் பகுதியில் வரும் ஊழியர் ரயிலை நிறுத்தி மெதுவாக வந்து கொண்டிருக்கும் போது அவசரமாக கீழே இறங்கி ஓடி கேட்களை மூடிவிட்டு மெதுவாக நகரும் ரயிலில் ஏறிக் கொள்கிறார். அதே போல அதே ரயிலில் கடைசி பெட்டியில் வரும் ஒரு ஊழியர் அவசரமாக இறங்கி ஓடிச் சென்று கேட்டை திறந்துவிட்டு ரயிலின் கடைசிப் பெட்டியில் ஏறிச் செல்கிறார். இந்த காட்சி அறந்தாங்கியில் வீடியோவாக எடுக்கப்பட்டு வைரலாக பரவி வருகிறது.
ரயில் இயக்கத் தொடங்கிவிட்ட போதும் கூட கேட் கீப்பரை ரயில்வே நிர்வாகம் நியமிக்காமல் ரயிலில் வரும் ஊழியர்களையே கேட் திறக்க மூட பயன்படுத்துவதால் அந்த ஊழியர்கள் ஓடும் ரயிலில் ஆபத்தான பணியை செய்கிறார்கள்.
இந்த நிலை எப்ப மாறும்?