விடுமுறை தினமான இன்று ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் மிக பிரபலமான சுற்றுலாத்தலம் பாம்பன் பாலம். இங்கு வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் தினந்தோறும் ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பாம்பன் பாலத்திற்கும் வருகை தந்து கடலின் அழகை ரசிப்பது வழக்கம். இந்த முறை தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பாம்பன் பாலத்தின் மீது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மண்டபத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வரக்கூடிய வாகனங்களும், ராமேஸ்வரத்திலிருந்து மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்களும் மிக மெதுவான வேகத்தில் ஒவ்வொன்றாகச் செல்கிறது. அதேபோல் பாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவரில் நின்றுகொண்டு ஆபத்தான முறையில் செல்ஃபிகளை எடுக்கக்கூடாது, எச்சரிக்கையாக பாலத்திலிருந்து கடலை பார்வையிட வேண்டும் என பல்வேறு அறிவிப்புகள் காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டிருந்தாலும் அதனை அலட்சியப்படுத்தும் வகையில் சில சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.