மத அமைதியை குலைக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
மதுரையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன. அப்போது பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின், மதுரை கூடல்புதூரில் கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து சிறுபான்மையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த அரவிந்தன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார். அந்த சம்பவங்களைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மத அமைதியை குலைக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் எச்சரித்தார்.