திருச்சி பழைய இ.பி. ரோட்டில் இரசாயன மருந்து மூலம் பழுக்கவைத்த மாம்பழம் விற்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கு ஆய்வு செய்தபோது, புகாருக்குள்ளான அந்த கடைகளில் சுமார் 1200 கிலோ செயற்கை முறையில் இரசாயன மருந்து தெளித்து பழுக்கவைத்த மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பழங்களை கைப்பற்றி அழித்தனர். மேலும், உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில், “இதுபோன்று செயற்கை முறையில் இரசாயன மருந்து தெளித்து பழுக்கவைத்த பழங்களை பொதுமக்கள் உண்ணும்போது அவர்களுக்கு வயிற்று எரிச்சல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது புற்றுநோய் வருவதற்கான காரணமாக அமைந்துவிடும். அதனால் உணவு வணிகர்களும், பொதுமக்களும் இதுபோன்று பழங்களை விற்கவோ வாங்கவோ கூடாது. வருங்காலங்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுவதிலும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்ராஹிம், ஸ்டாலின், வசந்தன், செல்வராஜ், அன்புச்செல்வன் மகாதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.