தூத்துக்குடி அருகேயுள்ள வாகைக்குளம் டோல்கேட், சுங்கக் கட்டணமாக 5 ரூபாய் கூடுதலாக வசூலித்த அடாவடிக்காக அபராதம் விதித்திருக்கிறது நீதிமன்றம்.
நெல்லைப் பக்கம் உள்ள வீரவநல்லூரின் வழக்கறிஞர் பிரபாகரன் கடந்தாண்டு மே 4 ஆம் தேதி அன்று காரில் தூத்துக்குடி சென்றிருக்கிறார். அப்போது வாகைகுளம் டோல்கேட்டின் ஊழியர்கள் அவரிடமிருந்து ரூபாய் 90 சுங்கக் கட்டணமாக வசூல் செய்து தூத்துக்குடி சென்று வர ரசீது கொடுத்துள்ளனர். ஆனால் அதற்கு கட்டணமே 85 தான் என டோல்கேட் அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வழக்கறிஞரிடம் ரூபாய் 90 வசூல் செய்யப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் 5 ரூபாயை தன்னிடமிருந்து கூடுதலாக வசூல் செய்யப்பட்டதாக வழக்கறிஞர் பிரம்மா மூலம் பிரபாகரன் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நுகர்வோர் நீதிபதி தேவதாஸ் உறுப்பினர்கள் சிவமூர்த்தி, முத்துலட்சுமி, ஆகியோர் டோல்கேட் நிர்வாகம் கூடுதலாக 5.ரூபாய் வசூல் செய்திருப்பது முறையற்ற நேர்மையற்ற வாணிபச் செயல். அதனால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 15 ஆயிரம் அபராதமும், மனுதாரரின் வழக்கு செலவிற்காக 5 ஆயிரமும், மனுதாரரிடம் கூடுதலாக வசூல் செய்த தொகை ரூ.5ம் சேர்த்து 20,005 ரூபாயை டோல்கேட் நிர்வாகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்தத் தொகை ஒரு மாத்திற்குள்ளாக வழங்கவேண்டும். தவறும்பட்சத்தில் டோல்கேட் நிர்வாகம் 5 சதவிகித வட்டியுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
நேர்மையற்ற டோல்கேட்டின் வணிகத்திற்கு மூக்கணாங்கயிறு போட்டிருக்கிறது நீதிமன்றம்.