
தமிழகத்தில் கழிவறைகள் கட்டுவதில் ஏகப்பட்ட தில்லுமுள்ளுகள் நடந்திருப்பதால் கழிவறைகள் இல்லாமல் காட்டுப் பக்கம் ஒதுங்கும் பெண்கள் படும் துயரம் சொல்லிமாளாது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு தென்நகர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், கழிவறை இல்லாததால் காட்டுப் பக்கம் ஒதுங்க போகும் போது பின் தொடரும் சில இளைஞர்களால் எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது. ஆகவே அவர்களை கண்டிக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார். அந்தப் புகாரில் சில பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகார் பற்றி அறிந்த நாம், அந்த கிராமத்திற்கு சென்று விசாரித்த போது.. தென் நகர் கீழத்தெருவில் சுமார் 150 வீடுகள் உள்ளது. பொது கழிவறை ஒன்று கட்டி பயன்படுத்த முடியாமல் கிடக்கிறது. வீடுகளுக்கான தனிநபர் கழிவறையும் இல்லாததால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாருமே காட்டுப்பக்கம் தான் ஒதுங்க வேண்டிய கட்டாயம். அப்படி பெண்கள் ஒதுங்க போகும் போது தான் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். செல்போன்களோடு சிலர் பின் தொடர்வது வேதனையாக உள்ளது. எங்களுக்கு வேற வழி இல்லாம அங்கே தான் ஒதுங்க வேண்டியுள்ளது.

பேரூராட்சி நிர்வாகத்தில் வீட்டுக்கு வீடு ரூ.12 ஆயிரம் மதிப்பில் தனி நபர் கழிவறைகள் கட்டிக் கொடுக்கவில்லையா? என்ற நமது கேள்விக்கு.. ஓ அதுவா சில வருசம் முன்னாள 40, 50 வீடுகளுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பில் தனி நபர் கழிவறை கட்டுவதா சொல்லிட்டு கொஞ்சம் ஹாலோ பிளாக் கல், அரை மூட்டை சிமெண்ட், 2 மூட்டை மணல், மேலே போட ஒரு தகரம், கதவுக்கு ஒரு தகரம், ஒரு பீங்கான் கொண்டுவந்து ஒரு மணி நேரத்தில் சுவர் கட்டிட்டு போனாங்க. அவ்வளவு தான். அதுக்கு பிறகு வரல. இதுக்கு ரூ.8 ஆயிரமாம். இதில் மறுபடி கட்ட, கூலி வேலை செய்ற எங்களால முடியல. அதனால வழக்கம் போல காட்டுப் பக்கம் ஒதுங்குறோம். இப்படி ஒதுங்கும் போது தான் இத்தனை வேதனைகளையும் சகிக்க வேண்டி இருக்கு. பல பெண்கள் அழுகிட்டே வருவாங்க. கேட்டால் பதில் சொல்ல முடியாம குமுறிக்கிட்டே போவாங்க. என்ன செய்றது நாங்க ஏழைங்க தானே என்றனர் வேதனையாக.

இது பற்றி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிந்ததால் வேகமாக பொது சுகாதார வளாகத்தில் தண்ணீர் நிரப்பியுள்ளனர். இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் வீட்டுக்கு வீடு கழிவறை கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை அந்தந்த பயனாளிகளிடம் கொடுக்காமல் அதிகாரிகளே போலியான ஒப்பந்தக்காரர்களை நியமித்து போலியான கழிவறைகளை கட்டி பணத்தை எடுத்துக் கொண்டதால் தமிழகம் முழுவதும் இப்படியான தொல்கைளை அனுபவித்து வருகிறார்கள் பெண்கள். வெளியே சொல்ல கூச்சப்பட்டு, வெட்கப்பட்டு அமைதிகாப்பதால் மேலும் மேலும் தொல்லைகளை அனுபவிக்கிறார்கள் என்பது வேதனையானது. இது தொடர்பாக புதிய அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காமுகர்களிடம் இருந்து பெண்களை காக்க முடியும். ஏமாற்றப்பட்ட குடும்பங்களுக்கு கழிவறைகளும் கட்ட முடியும்.