தமிழகத்தில் 16-ஆவது நாளான இன்றும், 2 ஆயிரத்திற்கும் குறைவாக 1,430 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,79,046 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் தமிழகத்தில் கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 12 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. இன்று, 11,073 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்தாயிரத்தை நோக்கி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நகர்ந்து வருகிறது.
சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 393 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 42-ஆவது நாளாக 1,000 -க்கும் குறைவாகக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,14,577 ஆக அதிகரித்துள்ளது. இன்று, ஒரேநாளில் தமிழகத்தில் 65,579 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், இன்று மேலும் 1,453 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை, தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,56,279 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கரோனாவால் 13 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,694 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,843 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.