Skip to main content

‘குரூப் - 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது?’ - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு! 

Published on 27/09/2024 | Edited on 27/09/2024
TNPSC announcement for When will the results of Group 2, 2A exam 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி (20.06.2024) அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் விண்ணப்பதாரர்கள் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2327 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களினால் இணைய வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை எனத் தேர்வர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் ஜூலை 20ஆம் தேதி (20.07.2024) வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு மொத்தம் 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதன் மூலம் ஒரு பணியிடத்திற்குச் சராசரியாக 340 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதற்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இதனையடுத்து தேர்வு எழுதிய தேவர்கள் இந்த தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இந்த முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு அடுத்தாண்டு (2025) பிப்ரவரியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு தொடர்பான செயல்முறை அறிவிப்புகளுக்கு, https://www.tnpsc.gov.in/English/SelectionSchedule.html என்ற இணையதளத்தில் உள்ள தேர்வு அட்டவணையைப் பார்க்கவும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்