தமிழக மாணவர்களுக்கு,
தமிழக அரசு அநீதி விளைவித்துள்ளது:விஜயகாந்த்
நீட் தேர்வில் மாணவர்களை குழப்பத்தை ஏற்படுத்திய தமிழக அரசை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அறிக்கை:
’’தமிழகத்தில் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீட் தேர்வு இருக்கிறதா இல்லையா என்கிற தீர்வேயே ஏற்படுத்தாமல் தொடர் குழப்பத்தை தமிழக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஏற்படுத்திய தமிழக அரசை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பிரச்சனைக்கு முழு காரணம் ஆளும் கட்சியின் நிர்வாக திறமையின்மையே. இந்தியாவில் மற்ற மாநிலங்கள் விலக்கு அளிக்காத பொழுது, தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒரு வருடமாக மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது, தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என்று கூறினார்கள்.
பத்துநாட்களுக்கு முன்பு இந்த ஒருவருடத்திற்கு மட்டும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என்றார்கள். ஆனால் தற்போது நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசும், நீதிமன்றமும் கூறியுள்ளது. ஆளும் கட்சியின் முழு சாயமும் வெளுத்துள்ளது. ஆட்சியாளர்கள் தங்கள் பதவியும் ஆட்சியும் தக்கவைத்துக்கொள்வதிலையே கவனம் செலுத்துகிறார்கள். இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் தான் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வருமான வரித்துறையில் சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்று வருமான வரித்துறை வழக்கில் இருந்து எப்படி தன்னை காப்பற்றிக்கொள்வது என்ற முயற்சியில் தான் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஆனால் பத்திரிக்கையாளர்கள் சந்திபில் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்று கூறிவந்தார். இப்பிரச்சனைக்கு காரணமான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பாராளுமன்ற துணை சாபாநாயகர் தம்பிதுரை, ஆளும் கட்சியையும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.
ஆரம்பம் முதலே நீட் தேர்வுக்கு ஆயத்தமாகுங்கள் என்று மாணவர்களுக்கு தெளிவான ஒரு வழிநடத்தலை தேமுதிக கூறிவந்தது. ஆளும்கட்சியும், எதிர்கட்சிகளும் நீட் விவகாரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் செயல்பட்டதின் விளைவு இன்று ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக மாணவர்களுக்கு, தமிழக அரசு அநீதி விளைவித்துள்ளது.’’