தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அந்தவகையில், வெளி மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் டேங்கர்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. மேலும், கரோனா தடுப்பூசியை தமிழகத்தில் அனைவருக்கும் செலுத்தும் வகையில் உலகளாவிய டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்பட்டது. இதில் நோயாளிகளின் உறவினர்கள் இரவு பகலாக காத்திருந்து ரெம்டெசிவிர் மருந்து வாங்கிச் செல்லும் சூழல் ஏற்பட்டதாலும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் அதிக அளவில் மருந்துகள் வாங்கப்படுவதாலும், தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதை உறுதிசெய்ய முடியும் என்றும், கள்ளச்சந்தையில் மருந்து விற்பனையைத் தடுக்க முடியும் என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து பெற, மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டது. http://ucc.uhcitp.in/form/drugs என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து ரெம்டெசிவிர் மருந்தைப் பெறலாம். கரோனா நோயாளிகளின் விவரங்களைப் பதிவேற்றம் செய்து தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்தைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனை விவரம், நோயாளியின் விவரம், தொற்று அறிகுறி, இணைநோய் விவரங்களைப் பதிவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.