ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு, இலவசமாக மாணவ, மாணவியருக்குத் தேவையான 1- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடப்பிரிவு புத்தகங்களை அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறது.
இந்த இலவச பாடப் புத்தகங்கள் அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு பின்பு அவைகள் கல்வி மாவட்டத்தில் வருகிற ஒவ்வொரு அரசு பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. பின்னர் அவைகள் மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இப்படி மாணவர்களுக்கு சப்ளை செய்தது போக மீதமுள்ள புத்தகங்களை அடுத்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு தரும் பொருட்டு அரசு பள்ளிகளில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்படும். இந்த சேமிப்புகள் எமிஸ் என்கிற தகவல் மூலம் திரட்டி வைக்கப்படும்.
இந்தச் சூழலில் நெல்லை மாவட்ட வள்ளியூர் கல்வி மாவட்டத்திற்கு கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட 1- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரையிலான இலவச பாடப்புத்தகங்கள் ஏர்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கரோனாத் தொற்றுக் காரணமாக கடந்த இருபது மாதங்களாக மாணவர்கள் ஆன்லைனில் கற்றதால் மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது.
தற்போது கரோனாத் தொற்று குறைந்த காரணத்தால் மாணவர்களுக்கு புத்தங்கள் வழங்க வேண்டிய நிலை. அதற்காக ஏர்வாடி நடு நிலைப் பள்ளி திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட போது இருப்பு வைக்கப்பட்டிருந்த இலவச பாடப்புத்தகங்கள் கரையான்களால் அரிக்கப்பட்டுச் செல்லரித்துப் போய் குப்பை போன்று கிடப்பது தெரியவர ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்வி அலுவலர்களிடையே பெருத்த அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டிருக்கிறது.
தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ.வான ரூபி மனோகரன் பள்ளியை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களைக் கண்டித்திருக்கிறாராம். கல்விக் கண்களைத் திறக்க வேண்டிய கல்விப் புத்தகங்கள் கரையான்களுக்கு இரையாகியிருக்கிறது.