தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காகத் திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (26/04/2021) காலை 09.15 மணிக்கு அனைத்து கட்சிக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கனிமொழி எம்.பி., பாஜக சார்பில் மாநில தலைவர் எல்.முருகன், கட்சியின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன், வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சி சார்பில் கே.வி.தங்கபாலு, ஜெயக்குமார், தேமுதிக. சார்பில் அன்புராஜ், பாலாஜி, பாமக சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விசிக, மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (26/04/2021) காலை 11.00 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்றே பிறப்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.