கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நேற்று (19.01.2024) முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை நேற்று மாலை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி முடிவடைந்ததும் இரவு ஆளுநர் மாளிகையில் தங்கிய பிரதமர், இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். இதற்காக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் செல்லவுள்ளார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவினையொட்டி பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் புனித நீராடி அங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் பாதுகாப்பு கருதி பக்தர்கள், போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருவதையொட்டி, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாணம் வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.