வரும் செப்டம்பர் 14- ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை சென்னை கலைவாணர் அரங்கில் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் மூன்று நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்திருந்தார்.
மேலும் கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், காவல்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கும் பேரவை கூடுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், பேரவைக்கு வரும்போது பரிசோதனை முடிவு சான்றிதழ்களை அனைவரும் வைத்திருக்க வேண்டும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
அதன்தொடர்ச்சியாக சுகாதாரத்துறை அதிகாரிகள், முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு சென்று நேற்று கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இரு எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா உறுதியானதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.