தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 133 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கைப்பற்றி திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அத்துடன் 33 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது.
அதிமுக, 66 சட்டப்பேரவைத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய நிலையில் சட்டப்பேரவையில் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழக எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதற்கான கடிதத்தை சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசனிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வழங்கினர்.
அதன் தொடர்ச்சியாக, 16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (11/05/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது. இதில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றனர். இவர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஈ.பி.எஸ். கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்!
1974ஆம் ஆண்டு முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரான எடப்பாடி பழனிசாமி, பின்னர் அவரது சொந்த ஊரான எடப்பாடி ஒன்றியம், சிலுவம்பாளையத்தில் கட்சியின் கிளைக் கழக செயலாளரானார். 1985ஆம் ஆண்டு எடப்பாடி ஒன்றியம் முழுவதும் அம்மா பேரவைத் தொடங்கினார். 1990ஆம் ஆண்டு அதிமுக சேலம் வடக்கு மாவட்ட இணைச் செயலாளரானார். 1991ஆம் ஆண்டு சேலம் வடக்கு மாவட்டச் செயலாளரானார். அதைத் தொடர்ந்து, 2006ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2007ஆம் ஆண்டு கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் மற்றும் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளரானார். 2017ஆம் ஆண்டு அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றார். கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் வகித்துவரும் எடப்பாடி பழனிசாமி, 1989ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 'சேவல்' சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அதன் தொடர்ச்சியாக, 1991 - 1996ஆம் ஆண்டுகளில் எடப்பாடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்தார். மேலும், 1992 - 1996ஆம் ஆண்டுகளில் சேலம் மாவட்ட திருக்கோயில்களின் வாரியத் தலைவர், 1993 - 1996ஆம் ஆண்டுகளில் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
1998 முதல் 1999 வரை திருச்செங்கோடு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். 2011ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரானார். பின்னர், 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரானார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி முதன்முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். தற்போது அதிமுக ஆட்சியை இழந்துள்ளதால், தமிழக எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.