சேலத்தில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கொலுசுகளை காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
சேலம் மூன்று சாலை அருகே இரு நாள்களுக்கு மார்ச் 24- ஆம் தேதி இரவு, பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் நித்யா தலைமையில் காவல்துறையினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காருக்குள் 311.50 கிலோ எடையில் வெள்ளிக் கொலுசுகள் இருந்தது. அந்த கொலுசுகளை மஹாராஷ்டிராவிற்கு எடுத்துச் செல்வது தெரியவந்தது. ஆனால் அவற்றுக்கான ஆர்டர் குறித்த ஆவணங்களோ, பில் ரசீதுகளோ காரில் வந்தவர்களிடம் இல்லை.
பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஜோஸ் ரவீந்திரகதம் என்பவரின் வெள்ளிப்பட்டறையில் இருந்து கொலுசுகள் தயாரிக்கப்பட்டு, அவருடைய சொந்த ஊரான மஹாராஷ்டிரா மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. கொலுசுகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை காவல்துறையினர் உடனடியாகப் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 98 லட்சம் ரூபாய். பறிமுதல் செய்யப்பட்ட கொலுசுகளை காவல்துறையினர், தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். பறக்கும் படை அதிகாரிகள் கொலுசுகளை, சேலம் மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சத்திய பாலகங்காதரனிடம் ஒப்படைத்தனர்.