தேர்தல் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், வருமான வரித்துறையும் தங்கள் சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பான தொகுதி விராலிமலை. எதற்கும் பஞ்சமில்லாத தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. இங்கு அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் விஜயபாஸ்கரும், தி.மு.க. வேட்பாளராக தென்னலூர் பழனியப்பனும் போட்டியிடுகின்றனர். கடும் போட்டியில் பிரச்சாரங்கள் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அமைச்சர் தரப்பு பரிசுப் பொருள் கொடுக்க தயாராகி உள்ளதாக தி.மு.க. தரப்பு புகார் கொடுத்திருந்தது. எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், சில நாட்களாக அ.தி.மு.க. சேலைகள், மளிகைப் பொருட்கள், பல கிராமங்களின் வரைபடம் மற்றும் பெயர்கள் உள்ள டைரி ஒன்று சிக்கியுள்ளது. மற்றொரு பக்கம் கடந்த ஒரு வாரமாக திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை பகுதியில் சுற்றி வந்தனர்.
இந்த நிலையில், இன்று (26/03/2021) விராலிமலை வடக்கு ஆசாரித் தெருவில் உள்ள சுகாதார ஆய்வாளர் வீரபாண்டியன் வீட்டில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் மதியத்தில் இருந்து சோதனையைத் தொடங்கியுள்ளனர். சுகாதார ஆய்வாளர் வீட்டில் ஏன் வருமான வரித்துறை சோதனை?
இந்த வீரபாண்டியன், பெயருக்குத்தான் சுகாதார ஆய்வாளர். அவர் எந்த மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அதற்கு முன்பிருந்தே அமைச்சர் விஜயபாஸ்கரின் அண்ணன் மேட்டுச்சாலை மதர் தெரசா கல்லூரிகளின் நிர்வாகி உதயகுமாரின் உதவியாளர். எல்லா பரிமாற்றங்களும் இவர் மூலமே நடக்கும், எப்பவும் பையும் கையுமாகவே சுற்றுவார். அதனால்தான் அவருக்கு சகாதார ஆய்வாளர் பணியைக் கொடுத்து பக்கத்திலேயே வைத்திருக்கிறார்கள். இதேபோல, இன்னும் 10- க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னீசியன்கள் வேலை செய்யும் இடம் கூட தெரியாமல் அரசு சம்பளம் வாங்கிக் கொண்டு அமைச்சருடன் சுற்றுகிறார்கள் என்றனர் விபரம் அறிந்தவர்கள்.