தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல், கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாளையுடன் (19/03/2021) நிறைவடைய உள்ளதால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர். அதேபோல், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம், மேற்குவங்கம், கேரளா, தமிழகம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிகளவில் பணம், தங்கநகைகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொளி மூலம் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் டி.ஜி.பி., ஐ.ஜி. உள்ளிட்ட காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், பரிசுப்பொருள் விநியோகம், பணப்பட்டுவாடா தடுப்பு உள்ளிட்டவை பற்றி காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.