தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017- ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து வந்ததாக ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் உரிமை மீறல் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தனி நீதிபதியின் தடையை எதிர்த்து நீதிபதிகள் அமர்வில் சட்டப்பேரவை செயலர் மேல்முறையீடு செய்திருந்தார். இதனிடையே கு.க.செல்வம் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நிலையில் ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி உயிரிழந்துவிட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் அமர்வு தீர்ப்பளித்தது. அதில், 'தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்யப்படுகிறது. நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். புதிதாக அனுப்பப்படும் நோட்டீஸுக்கு மனுதாரர்கள் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைக்கலாம்' என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.