காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.
இந்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
இதனிடையே பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, "அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என கருதி திமுக வெளிநடப்பு செய்துள்ளது. மசோதா நிறைவேற்றப்படவுள்ள நிலையில் திமுக அரசியல் செய்து வெளிநடப்பு செய்துள்ளது வருத்தம் அளிக்கிறது. பல ஆண்டு கால விவசாயிகளின் கோரிக்கை அனைவரின் ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேறியிருக்க வேண்டும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.
நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்த "தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல்" மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.