திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சில சமுகத்தினர் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஊர் பகுதியில் கோவில் அமைந்துள்ளதால் சுமார் 80 வருட காலமாக பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வந்தனர். கோவிலின் வெளியில் இருந்தே சுவாமி தரிசனம் செய்ய வைத்துள்ளனர்.
இந்நிலையில் முத்து மாரியம்மன் கோவில் கருவறையில் உள்ள சுவாமியை உள்ளே சென்று அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்கள் சார்பிலான சில அமைப்புகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்தக் கோரிக்கை மனுவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு பட்டியலின மக்கள் அம்மனை வழிபடலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஜனவரி 30 ஆம் தேதி கோவிலுக்குள் சென்று பட்டியலின மக்கள் சுவாமி தரிசனம் செய்யும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனால் அக்கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிகழ்வில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வெளியூர் நபர்களை அந்த ஊருக்குள் விடமாட்டோம் என ஊருக்கு வெளியே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அந்த கிராமம் வழியாக மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் நெருக்கடியை சந்தித்தனர். எங்கள் பகுதியில் உள்ள கோவிலுக்குள் பட்டியலின மக்களை விட மாட்டோம், அவர்கள் பகுதியில் உள்ள கோவிலுக்கு நாங்கள் போகிறோம்மா? எங்கள் பகுதியில் உள்ள கோவிலுக்குள் அவர்கள் ஏன் வர வேண்டும் என கோவில் முன் திரண்ட அந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கேள்வி எழுப்பினர். இதனால் பதற்றம் அதிகமானது. இந்த விவகாரத்தால் அந்த கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியது. போலீசார் அவர்களை எச்சரித்து கலைந்து போகச் சொல்லி அறிவுறுத்தினர்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், எஸ்.பி கார்த்திகேயன், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைந்து சுவாமியை வணங்குவதை நேரில் கண்டார். ஆயிரத்துக்கும் அதிகமான பட்டியலின மக்கள் ஊர்வலமாக கோவிலுக்குள் சென்றனர். நூற்றுக்கணக்கானவர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமியை வணங்கினர். கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்ததை சட்டரீதியாக தகர்த்து கோவிலுக்குள் செல்லும் உரிமையை பெற்ற பட்டியலின சமூக மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.