திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரில் அரசு வேளாண்மை கல்லூரி உள்ளது. இங்கு தமிழகத்தின் பல பகுதிகைளச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர். இந்த கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனக்கு பல்கலைகழகத்தின் இணை பேராசிரியர் தங்கபாண்டியன், பாலியல் தொந்தரவு தந்தார். இதுப்பற்றி பெண்கள் விடுதி காப்பாளரும், உதவி பேராசிரியர்களுமான மைதிலி, புனிதா இருவரிடம் கூறினேன். அவர்களும் அவருக்கு உடந்தையாக என்னை அவருக்கு பணிந்து போகச்சொன்னார்கள், மிரட்டினார்கள் என வானாபுரம் காவல்நிலையத்தில் கடந்த ஜீலை மாதம் புகார் தந்தார்.
அவர்கள் புகாரை பெறவில்லை. இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானபின் இதுப்பற்றி திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேரடியாக அந்த மாணவியை சந்தித்து விசாரணை நடத்தினார். அதன்பின் பல்கலைகழகத்திலும் விசாரணை நடத்தி, காவல்துறையில் வழக்கு பதிவு செய்யச்சொன்னார். அவர்களும் விசாரணை நடத்தினார்கள், நடத்தினார்கள், நடத்திக்கொண்டே இருந்தார்கள். இந்த விவகாரத்தில் களமிறங்கிய திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகள் களமிறங்கி போராட்டம் நடத்தியது. அப்போதும் காவல்துறை அமைதியாகவே இருந்தது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அமைத்த விசாரணைக்குழு, கல்லூரி முதல்வர் மற்றும் இணை, உதவி பேராசிரியர்களை காப்பாற்ற முடிவு செய்தே விசாரணை நடத்தியது. தங்கபாண்டியனை மட்டும் தற்காலிக பணிநீக்கம் செய்தவர்கள், மைதிலி, புனிதா இருவரையும் அவர்கள் விரும்பிய இடத்துக்கு இடமாறுதல் மட்டும் செய்தனர். அந்த மாணவியை தஞ்சாவூர் கல்லூரிக்கு இடமாற்றியது. அந்த மாணவி நான் தவறு செய்யவில்லை, இங்கேயே தான் படிப்பேன் என இடமாறுதல் கடிதத்தை பெறவில்லை. இதனால் அவரை கல்லூரிவிட்டு நீக்கியது.
இது சமூகஆர்வலர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் சிபிஎம் கட்சி அடுத்தக்கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்துயிருந்தது. இந்நிலையில் திடீரென திருவண்ணாமலை தாலுக்கா மகளிர் காவல்நிலையத்தில் வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், இணைபேராசிரியர் தங்கபாண்டியன், உதவிபேராசிரியர்கள் மைதிலி, புனிதா, இரண்டு மாணவிகள் என 6 பேர் மீது பாலியல் தொந்தரவு, பெண் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், குற்றவாளிக்கு உடந்தை, மிரட்டல் என 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.