திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ளது 11,603 எண்ணுள்ள டாஸ்மாக் மதுபானக் கடை. இந்தக் கடையில் மே 18ஆம் தேதி ஒரு இளைஞர் பீர் கேட்டு வாங்கியுள்ளார். 120 ரூபாய் மதிப்புள்ள பீரை அரசின் விலையேற்றம் மற்றும் விற்பனையாளரின் கட்டாய டிப்ஸ் என சேர்த்து 150 ரூபாய் என விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் எம்பயர் என்கிற கம்பெனி தயாரிப்பான அந்த பீர் கடந்த 2019 டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி தயாரித்ததாகவும், ஏப்ரல் 24 ஆம் தேதி வரை தேதி மட்டுமே அதனைக் குடிக்க முடியும் என அதில் அச்சிடப்பட்டுள்ளது. அந்தப் பீர் காலாவதியாகி 22 நாட்களுக்குப் பின்பு அந்தப் பாட்டில் விற்கப்பட்டுள்ளது.
இந்தப் பீரை வாங்கிய அந்தப் படித்த இளைஞரான அந்தக் குடிமகன், காலாவதியான பீர் எனத்தெரிந்து அதிர்ச்சியாகியுள்ளார். இதுப்பற்றி கடையில் உள்ள விற்பனையாளரிடம் முறையிட முயல ராமாயண கதையில் அனுமார் வால் போல் வரிசை நீண்டுயிருந்ததால் திரும்பி வந்துள்ளார்.
இதுபற்றி டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது, "அந்த பீரில் காலாவதி தேதி பார்த்ததால் தெரிந்துவிட்டது, இல்லையேல் தெரிந்திருக்காது. தற்போது விற்கப்படும் சரக்குகள் அனைத்துமே காலாவதியான சரக்குகள் தான். காரணம் இவைகள் ஜனவரி மாதம் கம்பெனிகளில் இருந்து டாஸ்மாக் குடோன்களுக்கு வந்தன. லாக்டவுனால் கடைகள் திறக்காததால் குடோன்களில் அப்படியே இருந்தன. கடைகள் திறந்திருந்தால் இவைகள் மார்ச் மாதமே காலியாகியிருக்கும். கடைகள் திறக்காததால் அப்படியே இருந்தன. தற்போது உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசாங்கம் அனுமதி வாங்கி கடைகளைத் திறந்துள்ளது.
கடைக்கு வருபவர்கள் சரக்கு இல்லையென திரும்பி சென்றுவிடக்கூடாதுயென பழைய ஸ்டாக்குகளை விற்பனைக்கு அனுப்பிவிட்டார்கள். அதனைத் தான் விற்பனை செய்து கொண்டு இருக்கிறோம். 80 சதவிதம் சரக்குகள் காலாவதியானது என்கிறார்கள்.
மது உடலுக்குக் கேடு என விளக்கமளிக்கும் அரசு, காலாவதியான மதுவை விற்பனை செய்கிறது. அதனை அறியாமலே வாங்கிக் குடிமகன்கள் குடிக்கிறார்கள். இது இன்னும் என்ன மாதிரியான கேடினை விளைவிக்கும் எனத் தெரியவில்லையே என வேதனைப்படுகிறார்கள் குடிக்கு எதிரானவர்கள்.