திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டத்தில் கோட்டாச்சியர் அலுவலகம் உள்ளது. வாணியம்பாடி கோட்டாச்சியராக இருப்பவர் காயத்ரி. இவர் ஜீன் 23ந் தேதி காலை வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் நகரத்துக்குள் ஜாப்ரபாத், சலாமாபாத், பாஷீராபாத் ஆகிய பகுதிகளில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் திடீரென ஆய்வில் ஈடுப்பட்டார்.
வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் குழுக்களாக வீதி வீதியாக நடந்து சென்று சாலையில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்களை எச்சரித்தார். மேலும் கரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் முகக்கவசம் அணியாமல் இருந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தார். அவர் சென்ற பகுதியில் கூட்டமாகவும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் விளையாடி கொண்டிருந்த இளைஞர்களை காவல்துறையினரை வைத்து விரட்டியடித்தார்.
இன்னொரு முறை இப்படி கூட்டமாக இருந்தாலோ, விளையாடினாலோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என உத்தரவிட்டார். கோட்டாச்சியரின் இந்த திடீர் நடவடிக்கையால் வாணியம்பாடி நகர மக்கள் அதிர்ச்சியாகினர்.