திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்மகிருஷ்ணபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மற்றும் முருகேசன். இருவரும் சகோதரர்கள். இருவருக்கும் திருமணமாகி மனைவி பிள்ளைகளுடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே பூர்வீகமாக உள்ள நிலம் மீதான பாகப்பிரிவினை தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 12 ந்தேதி இரவு இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு வந்துள்ளது, சண்டை கைகலப்பாகியுள்ளது. அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விலக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில் முருகேசனும் அவரது மனைவியும் வீட்டில் படுத்துக்கொண்டு இருந்தபோது, வெங்கடேசன் மனைவி சித்ரா, தன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து முருகேசன் மற்றும் அவரது மனைவி விஜயாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த விஜயாவை மீட்டு அக்கம் பக்கத்தினர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து விஜயா மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் போலீசார், முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், கொலை செய்த சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலத்தகராறில் ஒரு பெண்மணி, இருவரை வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.