திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காகச் சில தினங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். அவருக்கு மே 29ஆம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் உறவினர் ஒருவர் குழந்தையைப் பெற்றுள்ளார். அவரை பார்க்க வந்தேன் எனச்சொல்லி பாதுகாப்பான வார்டில் சுற்றி வந்துள்ளார்.
சம்மந்தப்பட்ட பெண்ணிடம் உரையாடிக்கொண்டு இருந்தவர், குழந்தையைப் பார்த்துவிட்டு தருகிறேன் எனச்சொல்லி வாங்கியதாகக் கூறப்படுகிறது. கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பெண்மணி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். குழந்தையின் தாயார் அழ, இதுப்பற்றி உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தரப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் நகர காவல்ஆய்வாளர் பேபி தலைமையில் ஒரு டீம் அமைத்து, மருத்துவமனை மற்றும் அந்தச் சாலையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு பெண்மணி தூக்கிச் செல்வது தெரிந்து, அவரை தேடத்துவங்கியுள்ளார்கள், வாகன சோதனை நடத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் நகரம் தேவங்கர் தெருவைச் சேர்ந்த நஹினா என்பவர் குழந்தையைக் கடத்திச்சென்று, அவரது வீட்டினுள் குழந்தையின் மீது துணியைப் போர்த்தி வைத்திருந்ததைப் போலிசார் கண்டுபிடித்துள்ளனர். குழந்தையை மீட்டு குழந்தையின் பெற்றோரிடம் எஸ்.பி. விஜயகுமார் ஒப்படைத்தார். குழந்தை கடத்தப்பட்ட 3 மணிநேரத்துக்குள் குழந்தையைக் கண்டுபிடித்த காவல்துறையினருக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர்.
குழந்தையைக் கடத்திய அந்தப் பெண்மணி, இதற்கு முன்பு இதேபோல் குழந்தை கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா? இவரது பின்னணி என்ன? மருத்துவமனையில் இருந்து குழந்தையைச் சுலபமாக வெளியே கொண்டு வந்தது எப்படி? போன்ற பல்வேறு கேள்விகள் உள்ளன. இதுபற்றி காவல்துறை தரப்பில் எந்தப் பதிலும் இல்லை. இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர் காவல்துறையினர்.