நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் (31-01-25) தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இதையடுத்து, இரண்டாம் நாளான நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம், பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டை, இல்லங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் திட்டம் நீட்டிப்பு, 5 ஆண்டுகளில் 5 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்க புதிய திட்டம் என்ற பல அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென தனி அறிவிப்பும் எதுவும் வெளியிடவில்லை.
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏமாற்றம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் 'தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை' என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''திமுக அரசை அகற்ற வேண்டும் என்றால் அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த பொழுது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பத்தாண்டுகளில் மூன்று முறை தான் தமிழ்நாட்டிற்கு பெயர் மென்ஷன் ஆகி இருக்கிறது. நீங்கள் எடுத்துப் பார்க்கலாம். எந்த ஆட்சியிலும் எல்லா மாநிலத்தையும் குறிப்பிடமாட்டார்கள். தமிழ்நாடு மட்டுமல்ல 28 மாநிலங்களின் பெயர்கள் இல்லை. தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என சொல்வது பொய் குற்றச்சாட்டு. தன்னுடைய தவறை மறைப்பதற்கு அடுத்தவர்கள் மேல் குற்றச்சாட்டை வைக்கிறார்கள். இது பெரிய குற்றச்சாட்டு இல்லை என்பது மக்களுக்கு புரியும். எல்லா நிதியும் எல்லா மாநிலத்துக்கும் போய் சேர்கிறது'' என்றார்.