நெல்லையின் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியிலுள்ளவர் பொன்இசக்கி. நெல்லையில் டீ மாஸ்டராக வேலை பார்ப்பவர். இவரது மனைவி முத்துலட்சுமி வண்ணார்பேட்டையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் திருமணமாகி திருப்பூரில் கணவனுடன் வசிக்க, மற்ற இருவருக்கும் திருமணமாகவில்லை. ஒரு மகள் நகைக் கடையில் வேலை பார்ப்பவர். கடைசி மகள் பிளஸ் 1 படித்துள்ளார்.
நிலைமை இப்படி இருக்க, முத்துலட்சுமிக்கும், நெல்லையில் மின்சாரவாரியத்தில் பணிபுரியும் அவரது உறவினருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நெருக்கமான உறவாகியிருக்கிறது. இதனால் வண்ணார்பேட்டையில் குடியிருந்து வந்த இவர்கள் கடந்த 6 மாதம் முன்பு மணிமூர்த்தீஸ்வரம் பகுதிக்கு மாறி வாடகை வீட்டிலிருக்கின்றனர். ஆனாலும், வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் உறவினர் மணிமூர்த்தீஸ்வரம் வந்து சென்றுள்ளார். மேலும் தாமிரபரணிக்குக் குளிக்கச்செல்லும் போது முத்துலட்சுமியும் முறை தவறிய உறவினரும் தனிமையில் சந்தித்தது கணவர் இசக்கிக்குத் தெரியவர, அவர் மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் முறை தவறிய உறவைக் கைவிடவில்லையாம். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்கிடையே தகராறு வேறு ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே முத்துலட்சுமி ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வந்தபோது கணவனுக்கும் மனைவிக்குமிடையே மறுபடியும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. உன்னால் தான், மானம் மரியாதை போய்விட்டது என்று கத்திய பொன்இசக்கி வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து முத்துலட்சுமியைச் சரமாரியாக வெட்டியிருக்கிறார். கழுத்து உட்பட உடலின் பல இடங்களில் வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார் முத்துலட்சுமி.
தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த நெல்லை உதவி போலீஸ் கமிசனர் சதீஷ்குமார், தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், விசாரணை நடத்தியதோடு உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்திற்காக அனுப்பிவைத்தனர். இதனிடையே பொன்இசக்கி தச்சநல்லூர் போலீசில் சரணடைய அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.