விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளவர் அதிமுகவைச் சேர்ந்த அர்ஜுனன். திண்டிவனம் அருகில் உள்ள ஏப்பாக்கம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் பகுதி நேர ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தக் கடை ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் இருப்பதால் பொதுமக்களுக்கு கடைக்கு சென்று வர ஏதுவாக இல்லை என்று கூறி ரேஷன் கடையை பொதுமக்கள் வசதியை முன்னிட்டு ஊருக்கு மத்தியில் புதிதாக ரேஷன் கட்டி திறக்க வேண்டும் என்று பகுதி மக்கள் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் அந்த ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்ட பிறகும் அந்தக் கடையை மாற்றம் செய்யப்படவில்லை. இது குறித்து அதிமுக எம்.எல்.ஏ அர்ஜுனன் மாவட்ட கூட்டுறவு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த ரேஷன் கடை அதே கிராமத்தில் உள்ள சேவை மையத்தின் அருகில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. முறையான திறப்பு விழா நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் எம்.எல்.ஏ அர்ஜுனன் கடை திறப்பு விழா செய்ய ஏப்பாக்கம் கிராமத்திற்கு சென்றிருந்தார். ஆனால் ரேஷன் கடை திறப்பதற்கு குறித்து எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்க செயலாளரிடம் எம்.எல்.ஏ விசாரித்த போது அவர்கள் எந்தவித பதிலும் கூறவில்லை. காரணம் ஏப்பாக்கம் ரேஷன் கடை உட்பட அப்பகுதியில் புதிதாக மேலும் மூன்று ரேஷன் கடைகளை அமைச்சர் மஸ்தானை வைத்து திறக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
கடை திறப்பது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறி அதன்படி கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை தன்னை அழைக்காமல் அமைச்சரை மட்டும் அழைத்து திறப்பு விழா நடத்த அதிகாரிகள் மறைமுகமாக முடிவு செய்து இருந்ததை கண்டு அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ அர்ஜுனன் கட்சியினர்களுடன் ரேஷன் கடைக்கு எதிரில் நின்று தர்ணா நடத்தியுள்ளார். காலை 11 மணி வரை போராட்டம் நடத்திய பிறகு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் எம்.எல்.ஏ கடையை திறப்பதற்கு அனுமதித்துள்ளனர் இதை தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் புதிய ரேஷன் கடையை அதிமுக எம்.எல்.ஏ அர்ஜுனன் திறந்து வைத்து ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.