மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை நேற்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். அதில் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்த மும்மொழிக் கொள்கை வருத்தத்தை தருகிறது என தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு கட்சியினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தற்பொழுது அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
“காலங்கள் மாறவில்லையா? கருத்துகள் மாறவில்லையா? மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.சி., மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பல்வேறு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன ஆனால் கூடுதலாக ஒரு மொழியைக் கற்கும் வாய்ப்பை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே இழக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் யார் மீதும் திணிக்கவில்லை என தெரிந்தும் அரசியல் செய்கிறார்கள். பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தமிழை மூன்றாவது மொழியாக படிக்கும் வாய்ப்பை நாம் புறக்கணிக்கிறோமா?” என தெரிவித்துள்ளார்.